கருப்பர் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற இஸ்லாமியர்கள்
- கருப்பர் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து சென்றனர்.
- பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி கிராமம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. கரிசல்பட்டியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா, மற்றும் கந்தூரி விழாவில் இந்துக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
அதனடிப்படையில் கரிசல்பட்டியில் வஞ்சினி கருப்பர் கோவில் கும்பாபி ஷேகம் நடந்து முடிந்த நிலையில் வருடாபிஷேக சிறப்பு பூஜையும் வஞ்சினி கருப்பர் கோவில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு அன்னதானமும் நடந்தது.
வஞ்சினி கருப்பர் கோவில் ஆவணி திருவிழா அன்னதானத்தை முன்னிட்டு கரிசல்பட்டி முஸ்லிம் ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து கிராம மக்கள் அழைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜமாத்தார்கள் கோவிலுக்கு தேங்காய், பழம், பட்டு உள்ளிட்ட இந்துக்களின் வழிபாட்டு சீர்வரிசை எடுத்து வந்து மதநல்லிணக்க திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் கலந்து கொண்ட ஜமாத்தார்களுக்கு ஊர் மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வு இந்த பகுதி பாரம்பரியத்தையும் சகோதரத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இதேபோல் சிங்கம்புணரி அருகே நாகமங்கலத்தில் தாருல் ஹைராத் மதரஸத்துன் நிஸ்வான் பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது.
இதில் பங்கேற்ற இந்துக்கள் மந்தையம்மன் கோவிலிலில் இருந்து பள்ளிவாசலுக்கு இனிப்புகள், பழங்களுடன் ஊர்வலமாக சீர் வரிசை கொண்டு வந்தனர்.
புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட சேர்மன் பொன்.மணிபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.