ரேசன் பொருட்கள் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் அவதி
- அபிராமம் பகுதியில் ரேசன் பொருட்கள் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
- கோதுமை, மண்எண்ணெய் சீனி, துவரம்பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அபிராமம் பகுதியில் உள்ள ரேசன்கடைகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அரிசி, தவிர கோதுமை, சீனி, துவரம்பருப்பு, மண்எண்ணெய் உள்பட அனைத்து பொருட்களும் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரேசன்கடையில் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் சாதாரண மக்கள் முதல் நடுத்தர மக்களும் ரேசன்கடையில் உணவு பொருட்களை வாங்கி பயனடைகின்றனர். அபிராமம் பகுதியில் உள்ள 3 ரேசன் கடைகளில் 1200 ரேசன்கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.
கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக அக்னி வெயில் நட்சத்திரம் முடிந்த நிலையிலும் தொடர் வெப்பத்தால் பகல்நேரங்களில் ரேசன்கடைகளுக்கு பொதுமக்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து காலை, மாலை ரேசன்கடைகளுக்கு சென்றால் கடை பூட்டியே கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
ரேசன்கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் அரிசியை தவிர கோதுமை, சீனி, துவரம்பருப்பு, மண்எண்ணெய் உள்பட பல பொருட்கள் அபிராமம் பகுதி பொதுமக்களுக்கு பெயரளவிற்கு மட்டுமே கிடைக்கிறது. முன் கூட்டியே ரேசன் பொருட்கள் வாங்க வராமல் மாத கடைசியில் ரேசன்கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்க வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதுபற்றி அபிராமம் அப்பகுதி மக்கள் கூறுகையில், தகுதியான அனைத்து ரேசன்கார்டு தாரர்களுக்கும் கோதுமை, மண்எண்ணெய் சீனி, துவரம்பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை. ஏழை மக்களின் நன்மை கருதி அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் மாதந்தோறும் ரேஷனில் ரேசன் பொருட்கள் கிடைக்க சமந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.