சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு
- தீபாவளி பண்டிகையையொட்டி சிறுதானிய இனிப்பு வகைகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
- இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி தரணி முருகேசன் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை முறையில் நெல், மிளகாய், பாசிப்பயறு, உளுந்து, திணை, குதிரைவாலி, கேப்பை உள்ளிட்ட சிறுதானிய பயிர்களையும், காய்கறிகள் உள்ளிட்டவற்றையும் பயிரிட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் முன்னோர்கள் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்டு வாழ்ந்து வந்ததன் காரணமாக அவர்கள் 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக இருந்து வந்தனர் ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் பலவிதமான நஞ்சு கலந்த உணவுகளை உட்கொண்டு வருவதனால் ஆயுள் காலங்கள் குறைந்து 50 முதல் 60 வயதிலே சொற்ப காலகட்டத்திலேயே மரணங்கள் அதிகரித்து வருகிறது
விவசாயி முருகேசன் தனது பண்ணைகளில் விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் நஞ்சு கலக்காத சிறு தானியங்களை வைத்து இனிப்பு வகைகளை தயார் செய்து தற்போது உள்ள சந்ததிகளை பாதுகாக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இயற்கை அங்காடி நடத்தி விவசாய பண்ணைகளில விளையும் வைக்கும் பொருட்களைக் கொண்டு பல விதமான இனிப்பு வகைகளை பண்டிகை காலங்களில் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த அங்காடியில் கம்பு, கேழ்வரகு, சோளம், எள்ளு, திணை, ராகி, வேர்கடலை, எள்ளு, ரவா உள்ளிட்ட சிறு தானியங்களை வைத்து செயற்கைக்கு மாற்றாக இயற்கை முறையில் 7 வகையான லட்டுகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை யொட்டி பாரம்பரிய முறைப்படி எந்த ஒரு கலப்படமும் செய்யாமல் இயற்கை முறையில் பண்ணையில் விளைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி, ஆத்தூர் கிச்சடி சம்பா அரிசி ஆகியவற்றை வைத்து முறுக்கு, அதிரசம் தயார் செய்து வருகின்றனர்.
இவைகள் அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் இருந்து கலப்படமில்லாமல் உற்பத்தி செய்யப்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் சுவையானதாக இருப்பதால் ராமநாதபுரத்தில் பல்வேறு அரசு அதிகாரிகளும், பொது மக்களும் தீபாவளிக்காக அதிகளவு நண்பர்களுக்கு கொடுப்பதற்காகவும், குடும்பத்திற்கு பயன்படுத்துவதாகவும் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
மேலும் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களுக்கு என்றே இந்த அங்காடியில் இயற்கை முறையில் தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுவதற்கு என்றே ஒரு கூட்டமே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதற்காக அங்காடியில் முறுக்கு, அதிரசம், லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி என்றாலே புத்தாடைக்கு அடுத்த படியாக இனிப்புகளை இறைவனுக்கு படையல் செய்து பின்னர் உறவினர்களுக்கும் வழங்கி பரிமாறிக்கொள்வது தொன்று தொட்டு இருக்கும் பழக்கமாக உள்ளதால் அதனை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் தற்போதுள்ள காலகட்டத்தில் ரசாயன கலப்படமில்லாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. ராமநாதபுரம் பகுதி பொதுமக்களிடம் இந்த புதிய முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.