உள்ளூர் செய்திகள்

கரை ஒதுங்கிய இலங்கை படகு.

கரை ஒதுங்கிய இலங்கை படகு: போலீசார் தீவிர விசாரணை

Published On 2022-06-19 08:02 GMT   |   Update On 2022-06-19 08:02 GMT
  • ஏர்வாடி கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகில் கடத்தல்காரர்கள் வந்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இந்த படகில் அகதிகளோஅல்லது வேறு நபர்களோ வரவில்லை. படகில் என்ஜின்கூட கிடையாது என்றனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன ஏர்வாடி கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு நேற்று மாலை கரை ஒதுங்கியது.

அந்த படகில் கழுகு உருவம் பொறித்த அடையாளம் உள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் இலங்கை தமிழர்கள் தமிழகத்தை நோக்கி கடல் மார்க்கமாக வருகின்றனர்.

அதேபோல் இந்த படகிலும் அகதிகள் தப்பி வந்தார்களா? அல்லது தங்க கடத்தல்காரர்கள் வந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. படகில் என்ஜின் இல்லாமல் இருப்பதால் படகில் வந்த கடத்தல்காரர்கள் என்ஜினுடன் தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

படகு கரை ஒதுங்கிய பிறகு மரைன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டும் அவர்கள் தாமதமாக வந்து விசாரணை நடத்தியதாக அந்த பகுதி மீனவர்கள் கூறினர்.

இதுகுறித்து மரைன் போலீஸ் தரப்பில் கூறுகையில், நேற்று கடலில் படகு மிதந்து வந்துள்ளது. இதை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பார்த்துள்ளனர். இந்த படகில் அகதிகளோஅல்லது வேறு நபர்களோ வரவில்லை. படகில் என்ஜின்கூட கிடையாது என்றனர்.

ஏர்வாடி தர்காவில் தற்போது சந்தனக்கூடு திருவிழா நடந்து வரும் சூழ்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இதை சாதகமாக்கிய கடத்தல்காரர்கள் பக்தர்கள் போர்வையில் இந்த பகுதியில் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடலோரப் பகுதிகளில் கூடுதல் காவல் படையினரை நியமித்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News