ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கட்டிட டெண்டர் நிறுத்தம்
- ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கட்டிட டெண்டர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டம் 2022-23-ன் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மிகவும் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்டுவதற்கும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்ப டையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 77 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 78 புதிய பள்ளி கட்டிடங்கள், 18 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோடைகால விடுமுறை முடிந்து ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் துவங்கும் போது புதிய கட்டிடத்தில் இயங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி 28.1.2022 அன்று வழங்கப்பட்டது. நல்லிருக்கை மற்றும் கொம்பூதி கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பின்னரே பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நல்லிருக்கை மற்றும் கொம்பூதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்பே இந்தப் பள்ளிகளில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்தப் பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்காக வழங்கிய ஒப்பந்தப்புள்ளி நிறுத்தம் செய்யப்பட்டு, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.