கமுதி யூனியன் கூட்டத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றிய கவுன்சிலர்
- கமுதி யூனியன் கூட்டத்தில் கோரிக்கைகளை வேற்றக்கோரி கவுன்சிலர் உடலில் மண்எண்ணை ஊற்றினார்.
- கூட்டத்தில் மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் தமிழ்செல்விபோஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், உதவி சேர்மன்.சித்ரா தேவி அய்யனார் முன்னிலை வகித்தனர். மேலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.
அ.தி.மு.க. (ஒ.பி.எஸ்.அணி) பேரையூர் கவுன்சிலர் அன்பரசு, கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை திறந்து தலையில் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது மண்எண்ணை மற்ற கவுன்சிலர்கள் மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
சேர்மன் தமிழ்செல்வி போஸ் 11-வது வார்டு பேரையூர் கவுன்சிலில் நடந்த திட்டப்பணிகளை பட்டியலிட்டார். மேலும் பேரையூரில் ரூ.50 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
அப்ேபாது கவுன்சிலர் அன்பரசு, பிற துறை அதிகாரிகள் யாரும் யூனியன் கூட்டத்திற்கு வருவதில்லை. மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளதை மின்வாரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பதில்லை என்றார். உடனே மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுந்து, பழுதடைந்துள்ள மின்கம்பங்களை படிப்படியாக மாற்றி வருகிறோம் என்றார்.