நில அளவையர் பற்றாக்குறையால் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்
- நில அளவையர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
- பல்வேறு பணிகளுக்கான பணியிடம் காலியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நில அளவையர் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்கள் அளிக்கும் நில உட்பிரிவு மனுக்கள் கிடப்பில் வைக்கப்படுகிறது. தற்போது பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் நடவடிக்கை எடுக்கப்படாமல் குவிந்துள்ளது.
அரசின் விதிமுறைப்படி நில உட்பிரிவு மனு அளித்த குறிப்பிட்ட நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவை துறையினரின் கடமை. ஆனால் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் 2 மாதத்திற்கு மேலாகியும் 200க்கும் மேற்பட்ட உட்பிரிவு மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் கிடப்பில் உள்ளன.
மனு அளித்தவர்கள் நில அளவை பிரிவு அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று அலைகின்றனர். நில அளவிற்கு முறைப்படி பணம் செலுத்தி பதிவு செய்து ஏராளமான விவசாயிகள் தங்கள் மனு மீது எப்போது அளவை உட்பிரிவு செய்யப்படும் என தெரியாமல் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து காத்திருந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, நில அளவையர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் மனுக்கள் மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நில அளவை உட்பிரிவு செய்து தர முடியாத நிலை உள்ளதாகவும், பல்வேறு பணிகளுக்கான பணியிடம் காலியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.