அமெரிக்காவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்யும் கிராமமக்கள்
- இயற்கை முறையில் பயிரிட்டு அமெரிக்காவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்தனர்.
- சம்பாமிளகாயை 5 வருடங்களாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ராமர். இவர் செயற்கை உரங்கள் இல்லாமல் இயற்கை முறையிலான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.
ரசாயன உரங்களை பயன் படுத்தாமல் நாட்டு மாட்டுச் சாணங்களை உரமாக பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, வண்ண பூச்சி ஒட்டிகளை பயன்படுத்தி வருகிறார்.மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வரும் இவர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது பெற்றுள்ளார்.
இவரது வயலில் விளையும், சம்பாமிளகாயை 5 வருடங்களாக அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த வருடம் இயற்கை விவசாயம் மூலம் இவரது தோட்டத்தில் விளைந்த சம்பாமிளகாயை, கொள்முதல் செய்வதற்கு முன்பு அமெரிக்கநாட்டில் இருந்து 2 பேர் வந்தனர்.
அவர்கள் கோரைப் பள்ளம் கிராமத்தில் ராமர் தோட்டத்திற்கு சென்று மிளகாய் செடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அவர்களுக்கு விவசாயி ராமர் தலைமையில் கிராம மக்கள் குலவையிட்டு, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இந்த வருடம் 200 டன் சம்பாமிளகாய், இந்த பகுதியில் உள்ள 20 கிராமங்களில் இருந்து, கொள்முதல் செய்ய உள்ளதாக அமெரிக்க நாட்டினர் கூறினர். மேலும் இருவரும் பாக்குவெட்டி கிராமத்தில் உருவாட்டி என்பவரின் மிளகாய் தோட்டத்திலும் ஆய்வு செய்தனர். பின்னர் கமுதி விவசாய கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் மிளகாயை ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாத்து வைக்கப்படும் குடோனை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் போஸ், தனியார் நிறுவன அதிகாரி சவுரப், கொள்முதல் மேலாளர் சஞ்ஜய், ஜோசப்ராஜ், கள ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.