தர்பூசணி, இளநீர் விற்பனை மும்முரம்
- தர்பூசணி, இளநீர் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
- இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் நடக்கிறது.
அபிராமம்
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். மே மாத அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ராமேசுவரம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர், நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
தாங்க முடியாத வெயில் கொடுமை காரணமாக பொதுமக்கள் சொல்ல முடியாத அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மக்கள் திறந்த வெளிகளை தேடி தூங்க செல்கின்றனர்.
கடும் வெயிலால் சாலை களில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. தற்போது 10-ம் வகுப்பு உள்பட பொது தேர்வும், பிற வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலால் அவதியடைந்து வருகிறார்கள். சிறுவர்கள். வயதானவர்கள் வெயிலின் உச்சபட்ச தாக்கத்தை பார்த்து வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், முதியோர்கள் அனைவரும் பகல் நேரங்களில் சாலையில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
வெயில் கொடுமை காரணமாக உடலில் நீர்சத்து குறைவதால் அதனை ஈடு செய்யும் வகையில் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ச்சியான பானங்களை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக அபிராமம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதியில் உள்ள சாலையோர தர்பூசணி, இளநீர் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
தர்பூசணி மற்றும் இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது.