உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்த காட்சி. 

ராசிபுரம் கைலாசநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

Published On 2023-05-05 07:03 GMT   |   Update On 2023-05-05 07:03 GMT
  • ராசிபுரத்தில் ஸ்ரீ தர்ம சம் வர்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது.
  • மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ தர்ம சம் வர்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சாமி திருவிதி உலா நடந்து வந்தது. நேற்று காலையில் அம்பாள் ரதத்திற்கு எழுந்த ருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், தக்கார் நந்தகுமார், ஆய்வர் கீதா மணி, பஸ் அதிபர் பரந்தா மன், நாயுடுகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜூ, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சங்கத்தினர் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேர் கதர்க்கடை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென்று மழை கொட்டியது. இருப்பினும் பக்தர்கள் மழையில் நனைந்து கொண்டே தேரை இழுத்துச் சென்றனர். நேற்று கடைவீதியில் பூக்கடை சந்திப்பில் தேர் நிறுத்தப்பட்டது. இன்று மாலையில் தேரோட்டம் தொடர்ந்து நடக்கிறது. 8-ந் தேதி சத்தாபரணமும், 9-ந் தேதி வசந்தோற்சவமும் நடக்கிறது.

Tags:    

Similar News