- போலீசாருக்கு அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
- 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஒருவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சனிக்கிழமை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு இடத்தில் பண்ணையில் இறால்களுக்கு தீனி போடுவதற்காக ரேஷன் அரிசி 1000 கிலோ பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக பட்டுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பட்டுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.