உள்ளூர் செய்திகள் (District)

கத்தரிக்காய் தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்த முயன்ற இருவர் கைது

Published On 2023-03-18 17:25 GMT   |   Update On 2023-03-18 17:25 GMT
  • மங்களம் கிராமத்தில் புதுப்பாளையம் செல்லும் சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது சிக்கினர்
  • ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று விற்பனை செய்வதாக தகவல்

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் இன்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.மங்களம் கிராமத்தில் புதுப்பாளையம் செல்லும் சாலையில் சென்றனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் அரிசி மூட்டைகளை கொண்டு சென்று கத்தரிக்காய் செடிகளுக்கு இடையே இறக்கி வைத்ததை பார்த்து சந்தேகம் அடைந்தனர். எனவே, அந்த இருவரையும் போலீசார் பிடித்து உரிய முறையில் விசாரித்தனர்.

அப்பொழுது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். எனவே, சந்தேகம் அடைந்த போலீசார் அப்பகுதியை அதிரடியாக சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு சுமார் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரேஷன் அரிசியுடன், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சின்ன நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ்(வயது28), ஆரம்பாக்கம் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(வயது32) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளில் ஆங்காங்கே சென்று ரேஷன் அரிசிகளை விலைக்கு வாங்கி கொண்டு வந்து கத்தரிக்காய் தோட்டத்தில் பதுக்கி வைப்பார்களாம். பின்னர், அதனை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று விற்பனை செய்வார்களாம்.

2 டன் ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை திருவள்ளூரில் உள்ள குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க ஆரணி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News