வத்தலக்குண்டுவில் தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக உறவினர்கள் புகார் சாலை மறியல் - போலீஸ் குவிப்பு
- உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- தவறான சிகிச்சையால்தான் பெண் இறந்தார் என கூறி ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காந்திஜி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னையா - தனலட்சுமி தம்பதியின் மகள் தேவிபிரியா (வயது35) இவருக்கும், மதுரை மாவட்டம் பாலமேட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிஷாந்த்குமார் (10) என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் வத்தலக்குண்டு காந்தி நகருக்கு வந்த தேவிபிரி யாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை பெற்றுவந்த தேவிப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேவிபிரியாவின் கணவர் சுப்பிரமணி, அவரது தந்தை சின்னையா, தாய் தனலட்சுமி மற்றும் உறவினர்கள் தவறான சிகிச்சையால்தான் தேவிபிரியா இறந்தார் என கூறி ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் டாக்டரை தேவிபிரியாவின் உறவினர்கள் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதனால் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்ைக எடுக்காவிட்டால் தாங்கள் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.
வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து தேவிபிரியாவின் உடலை அவர்கள் பெற்று சென்றனர். இச்சம்பவத்தால் ஆஸ்பத்திரி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.