பரமத்தி பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
- 15 வார்டுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது.
- சுற்றியுள்ள கிராமங்களில் வெறிநாய்கள் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பயந்து தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது.
சாலையில் செல்லும் பொதுமக்களையும், ஆடு மற்றும் கன்று குட்டிகளையும் கடித்து வருவதால், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டி பாதிக்கப்பட்டவர்கள் பரமத்தி பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரையிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களிலும் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. பரமத்தி கடைவீதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வெறிநாய்கள் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பயந்து தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளா கின்றனர்.
கடந்த 1-ந் தேதி வெள்ளாளபாளையம் ராமசாமி என்பவர் வீட்டில் புகுந்த வெறிநாய், 5 ஆடுகளை கடித்ததில், அவை இறந்து விட்டது. நேற்று வெள்ளாளபாளையம் பாலக்காடு பகுதியில் ராஜா என்பவர் மாட்டு கொட்டையில் புகுந்து ஒரு நாளே ஆன கன்று குட்டியை தெரு நாய்கள் கடித்ததில், அந்த கன்று குட்டி இறந்து விட்டது.
மேலும் இந்த பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளையும் தினந்தோறும் நாய்கள் கடித்து விடுகிறது. எனவே பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் வெறி நாய்களை, கட்டுப்படுத்த பரமத்தி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.