மணலியில் மாயமான கிணற்றை கண்டுபிடித்து தருமாறு மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை
- கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
- மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி மாயமாகி இருப்பது தெரிந்தது.
திருவொற்றியூர்:
மணலிபுதுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 5-வது பிளாக்கில் வசித்து வருபவர் பெருமாள். இவருக்கு சொந்தமான இடம் மணலி 200அடி சாலையோரம் சி.பி.சி.எல். தொழிற்சாலை மதில் சுவரையொட்டி உள்ளது.
அந்த இடத்தில் சுமார் 25 அடி ஆழத்தில் உறை கிணறு ஒன்று இருந்தது. கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் முடிந்த நிலையில் பெருமாள் தனது இடத்தை பார்க்க வந்தார்.
அப்போது அங்கு இருந்த கிணற்றை காணவில்லை. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி தரையோடு தரையாக மாயமாகி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பெருமாள், மாயமான தனது கிணற்றை கண்டு பிடித்து, பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என்று மாநகராட்சி மணலி மண்டல உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் மழைநீர் வடிகால்வாய் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தரையோடு தரையான கிணற்றை எப்படி மீட்பது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.