வால்பாறையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமை மீட்பு
- தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
- தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.
வால்பாறை
வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அவை அவ்வப்போது தேயிலை தோட்டம் மற்றும் ெதாழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
இந்த நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
பின்னர் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள தண்ணீர் தொட்டியின் அருகே சென்றது. அங்கு தண்ணீர் குடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக காட்டெருமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில் வால்பாறை வனசரகர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டெருமையை மீட்க முடியவில்லை.
இதையடுத்து அந்த தொட்டியின் பக்கவாட்டு சுவரை உடைத்து காட்டெருமையை மீட்கும் பணி நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8 மணியளவில் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அதனை வனத்தில் விட்டனர்.