உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் - தி.மு.க., அ.தி.மு.க. கம்யூ., ஆதரவு

Published On 2022-10-28 09:46 GMT   |   Update On 2022-10-28 09:46 GMT
  • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.4.½ கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
  • வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிக்கு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடை பெற்றது.

மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணன் பேசியதாவது:-

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.4.½ கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மாநகராட்சி விரிவாக்க பகுதிகளுக்கு ரூ.38.62 லட்சம் மதிப்பீட்டில் மின் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.5 கோடி மதிப்பில் மாநகர பகுதிக்கு புதிதாக 1050 மின் கம்பங்கள், மின் விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாக துறைக்கு ஒப்புதல் கோரி மனு அனுப்பப்பட்டுள்ளது.

பருவமழை

வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிக்கு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்.இதில் சுழற்சி முறை யில் பணியாளர்கள் ஈடுபடு வார்கள். மேலும் 1800 420 420 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கண்டறிய மாநகராட்சி பகுதியில் விரைவில் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கவுன்சிலர் கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, கிட்டு, பவுல்ராஜ், சந்திரசேகர், முத்துலெட்சுமி, ஜெகநாதன் என்ற கணேசன், ரவீந்தர், கருப்பசாமி கோட்டையப்பன், உலகநாதன் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்தும், புகார்கள் குறித்தும் பேசினர். பெரும்பாலானவர்கள் சாலைகளில் மாடுகள், நாய் உள்ளிட்டவைகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் உள்ளதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து சீரான குடிநீர் வழங்க கோரியும், அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகளுக்கு பொருத்தப்படும் மீட்டர்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்தனர்.

பின்னர் மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

Tags:    

Similar News