நெல்லை-திசையன்விளை இடையே இடைநில்லா பஸ்கள் மீண்டும் இயக்கம் - சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை
- நெல்லை - திசையன்விளை இடையே என்ட் டு என்ட் பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது.
- இந்நிலையில் வியாபாரிகள் சங்க பேரமைப்பின் திசையன்விளை சங்கத் தலைவர் சாந்தகுமார் தலைமையில், சபாநாயகர் அப்பாவு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோரிடம் இது குறித்து வலியுறுத்தப்பட்டது.
திசையன்விளை:
நெல்லை - திசையன்விளை இடையே என்ட் டு என்ட் என்ற பெயரில் இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது. இதனால் சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பயண நேரம் கூடியது. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபட்டு வந்தனர்.
எனவே மீண்டும் பழைய வழிதடத்தில் இயக்க வலியுறுத்தி திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்து இருந்தனர். மேலும் பல்வேறு சமுக அமைப்புகள் சார்பிலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சபாநாயகர் நடவடிக்கை
இந்நிலையில் வியாபாரிகள் சங்க பேரமைப்பின் திசையன்விளை சங்கத் தலைவர் சாந்தகுமார் தலைமையில், சபாநாயகர் அப்பாவு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோரிடம் இது குறித்து வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட நிர்வாக இயக்குனர் மோகனை தொடர்பு கொண்டு நெல்லை- திசையன்விளை இடைநில்லா பஸ்சை நான்குநேரி பஸ் நிலையம் செல்லாமல் புறவழி சாலை வழியான செல்லும்படி கூறினார். அவரது நடவடிக்கையால் இன்று (சனிக்கிழமை) காலை முதல் பஸ்கள் புறவழி சாலை வழியாக சென்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.