உள்ளூர் செய்திகள்

ஓய்வுபெற்ற பெண் போலீஸ் கொலை: ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது

Published On 2024-08-28 03:09 GMT   |   Update On 2024-08-28 04:43 GMT
  • கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
  • ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சி காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் வடமாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

கஸ்தூரி தனியாக வசித்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி (65) உறுதுணையாக இருந்தார்.

கஸ்தூரி தான் குடியிருக்கும் காலண்டர் தெரு வீட்டை விற்பதற்கு முயற்சி செய்தார். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கஸ்தூரியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கஸ்தூரியின் வீட்டை போலீசார் திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

போலீசார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் கஸ்தூரி கொலை வழக்கில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி குடும்பத்துடன் சென்ற வளையாபதியை காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

போலீஸ் விசாரணையில் வளையாபதி தனது நண்பரான பிரபு (52) என்பவருடன் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதைதொடர்ந்து போலீசார் வளையாபதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News