உள்ளூர் செய்திகள்

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 43 வீடுகளை இடிக்க வந்த பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

கடலூரில் பரபரப்பு : 43 வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு:பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்

Published On 2023-04-08 09:16 GMT   |   Update On 2023-04-08 09:16 GMT
  • இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியும், சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
  • நேற்று முன்தினம் நள்ளிரவு சாலை ஓரத்தில் இருந்த பயணியர் நிழற்குடையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

கடலூர்:

கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சகுப்பம் மணிகூண்டு வரை தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியும், சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை விரிவாக்க பணிக்காக 43 வீடுகளை இடிப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்கு மாற்ற இடம் வழங்கினால், நாங்கள் வீட்டை காலி செய்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடுகள் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான முழுமையான சான்று பொதுமக்களிடம் வழங்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு சாலை ஓரத்தில் இருந்த பயணியர் நிழற்குடையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 43 வீடுகளை இடிக்க பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது அங்கு திரண்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் எந்திரத்தை சிறை பிடித்து வீடுகளை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் எங்கள் வீடுகளை இடிக்க வேண்டுமானால் எங்களுக்கு மாற்ற இடம் வழங்கியதற்கான சான்று வழங்கிய பிறகு இடியுங்கள். அதுவரை வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம். எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விரைவில் முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க உள்ளோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News