கொடைக்கானல்: மூஞ்சிக்கல் பகுதியில் கனரக வாகனங்கள் ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
- மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலை மிக அகலமாக இருந்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது.
- மேலும் மாணவ- மாணவிகள் பிரதான சாலையை கடக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. கொடைக்கானல் முதல் வத்தலக்குண்டு வரை அவ்வப்போது சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் உடனடியாக ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் கொடைக்கானல் ஏரிச்சாலை வரை லாஸ்காட் ரோடு என்று அழைக்கப்படும் பகுதிகளில் பிரதான நெடுஞ்சாலைகளில் சாலைகளின் இரு பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கனரக வாகனங்களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தேவையான இடங்களில் சாலை தடுப்புகளை வைக்காமல் இட நெருக்கடி உள்ள சாலைகளில் சாலை தடுப்புகளை வைக்கின்றனர். குறிப்பாக மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலை மிக அகலமாக இருந்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது. இப்பகுதி உணவகங்கள், சாலையோர கடைகள், அங்கு நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மாணவ- மாணவிகள் பிரதான சாலையை கடக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதே பகுதியில் தான் நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. இதனை நேரடியாக கண்டும் காணாதது போல் கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை செயல்பட்டு வருகிறது. பல வருடங்களாக மூஞ்சிக்கல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் இன்றுவரை நடவடிக்கை இல்லை. இதனால் கனரக வாகனங்களை பிரதான சாலையில் நிறுத்துகின்றனர்.
இதன் காரணமாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் கூட செல்லமுடியவில்ைல. எனவே சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.