திட்டக்குடி அருகே இரு பிரிவினர் மோதல் ஏற்படும் அபாயம்: பதட்டம்- போலீஸ் குவிப்பு
- இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
- இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் கைகாட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி அப்பகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதியில் உள்ள பாலம் மற்றும் வேகத்தடையில் அக்கட்சியின் கொடியை பெயிண்டால் வரைந்து இருந்தனர். அதன் மேல் மற்றொரு சமூகத்தினர் சம்பவத்தன்று சிவப்பு பெயிண்டால் அழித்து உள்ளனர். இதனால் இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா மற்றும் போலீசார் இருவரும் அழைத்து நேற்று முன்தினம் இரவு பேச்சு வார்த்தை ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை திட்டக்குடி- ராம–நத்தம் நெடுஞ்சாலையில் உள்ள பெரங்கியம் பகுதி நெடுஞ்சாலை ஓரம் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை யாரோ அவிழ்த்து சென்று விட்டதாக கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று கூடினர். மீண்டும் இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.