உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில் திரண்ட பொதுமக்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தினர்.

நுகர்பொருள் வாணிப கழகத்தில் மழை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்

Published On 2023-11-25 08:49 GMT   |   Update On 2023-11-25 08:49 GMT
குடோனை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

கடலூர்:

கடலூர் செம்மண்டலம் தவ்லத் நகர், தண்டபாணி நகர், தவ்லத் நகர் விரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள குடோனுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை இறக்கி வைக்கும் போது தானியங்கள் சிதறி கீழே விழுகின்றன. மேலும், மழைக்காலங்களில் குடோனை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதால், ஏற்கனவே சிதறி கிடந்த பருப்பு, அரிசி அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நுகர்பொருள் வாணிபக் கழகத்தை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் குடோனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று காலை மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திரண்டு சென்றனர். அங்கிருந்த அதிகாரிகளிடம், அழுகி கிடக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளால் பொதுமக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவதால் உடனே குடோனை இடமாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். அப்போது அங்கிருந்து அதிகாரிகள் மண்டல மேலாளர் இல்லாததால் திங்கட்கிழமை வந்து மண்டல மேலாளரை சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்படி கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், அதிகாரிகளை அழைத்துச் சென்று மழை நீர் தேங்கி நிற்பதையும், அதில் அழுகி கிடக்கும் அரிசி, பருப்புகளில் இருந்து அதிக அளவில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதையும் காண்பித்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News