கடலூர் மாவட்டத்தில் விபத்தை குறைப்பதற்கு சாலை அளவீடு பணி மும்முரம்
- கடலூர் மாவட்டத்தில் விபத்தை குறைப்பதற்கு சாலை அளவீடு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- சாலை விபத்து குறைப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுப்பதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கும் இடங்களை கண்டறிந்தும், வருங்காலங்களில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகள் எவை என ஆய்வு செய்வதற்கு காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து தற்போது தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி இவர்கள் சிவில் பேராசிரியர்கள் மற்றும் என்ஜினியரிங் மாணவர்களை கொண்டு கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள விபத்து நடக்கும் சாலைகளை அளவிடு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் அந்த பகுதியில் போதுமான வெளிச்சம் உள்ளதா? இரும்பு தடுப்பு கட்டை அமைக்க வேண்டுமா? பிரகாசமான விளக்கு அமைக்க வேண்டுமா? சாலையில் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டுமா? உள்ளிட்டவைகளை அரசுக்கு தெரிவித்து அதனை பயன்படுத்தி வாகன விபத்தை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் தற்போது இடங்களை பார்வையிட்டு சாலையிலே அளவீட்டு செய்யும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதன் மூலம் நாளடைவில் சாலை விபத்து குறைப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.