சாலை விரிவாக்க பணி; பூச்சந்தை இடமாற்றம்
- 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
- வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் பூச்சந்தை தற்காலிக இடமாற்றம்.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தினமும் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.
மேலும் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் பூக்கார தெருவில் சாலை குறுகியதாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் மாநகராட்சி சார்பில் பூக்கார தெருவில் 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்க உள்ளது. பூக்கார தெருவில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
இதனால் இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வரும் பூச்சந்தையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் இன்று முதல் பூச்சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனையொட்டி ஏற்கனவே இயங்கி வந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது கடைகளை மாற்றினர். இன்னும் சில கடைகள் மட்டும் பூச்சந்தையில் உள்ளது. அதுவும் வரக்கூடிய நாட்களில் இடமாற்றம் ஆகி விடும்.