ஊட்டி தாவரவியல் பூங்காவில் சாலையோர வியாபாரிகள் போராட்டம்
- கடைகளுக்கான டெண்டர் கடந்த 10-ந் தேதி விடப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
- அ.தி.மு.க சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக கடைகளை கட்டியிருந்தது.இந்த கடைகள் இங்கு இருக்கக்கூடிய 120 சாலையோர வியாபாரிகளுக்கு வழங்குவதாக நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கடைகளுக்கான டெண்டர் கடந்த 10-ந் தேதி விடப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பை சாலையோர வியாபாரிகளுக்கு யாருக்கும் தெரிவிக்கவில்லை எனக் கூறி சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அ.தி.மு.க மாவட்ட செயலாளரை சந்தித்து டெண்டர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்தனர்.
இதனை கேட்டறிந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் இது குறித்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் நகராட்சி ஆணையாளர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அ.தி.மு.க சார்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக தெரிவித்தார்.