பண்ருட்டி அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து பணம் பறித்த கொள்ளையன் கைது: மேலும் 16 பேருக்கு வலை வீச்சு
- காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு காரை எடுத்து பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
- 17 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையத்தை சேர்ந்த பெருமாள். இவரது மகள் வைஷ்ணவி, மருமகன் மணிவண்ணன், அவரது தம்பி மணிசங்கர் ஆகியோர் பண்ருட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றனர். அங்கு காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு காரை எடுத்து பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 17 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தனர். காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு காரில் இருந்த 3 பேரையும் தாக்கினர். மேலும், அவர்களிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி நகர இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தலைமறைவாகியிருந்த கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று காலை போலீசார் பண்ருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இவர் பண்ருட்டி பாரதி நகர் ஜெயமூர்த்தி மகன் கவியரசு (38) என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மீதமுள்ளவர்களை எங்கு ஒளிந்து இருக்கின்றனர் என்பது குறித்து கவியரசுவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.