நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
- வங்கி கணக்குகள் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்பிலான தொகையுடன் முடக்கம்.
- வாகன விபத்தில் ஈடுபட்ட 1,123 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
2023 -ம் ஆண்டின் தொடக்க நாளான இன்று நாகை எஸ்பி. அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாகை மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் மட்டும் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பிடிக்கப்பட்டு, 68 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் இரண்டு படகுகள், 4 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட 69 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொகையுடன் முடக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து 2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் குற்ற சம்பவங்கள் குறைந்து உள்ளது. திருட்டு வழக்குகள் 80 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மேலும், களவு போன 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது.
மேலும், 2022 -ம் ஆண்டில் வாகன விபத்தில் ஈடுபட்ட 1123 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பாதுகாப்பான புத்தாண்டு அமைய நாகை மாவட்ட மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்தார்.