குன்னூரில் காரில் ரூ.2½ லட்சம் நாணயங்கள் பறிமுதல்
- வருவாய்த்துறை அதிகாரிகள் கார்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
- 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் மற்றும் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு சோதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்படி ஏதாவது இருந்தால், அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். காருக்குள் சாக்குமூட்டைகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரில் ஏறி சாக்குமூட்டையை பிரித்து சோதனை மேற்கொண்டனர்.
அதில், ஏராளமான 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதன் மதிப்பு 2 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கார் டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபரையும், பணத்தையும் குன்னூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில்,அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது.
இவர் நீலகிரியில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு கொடுப்பதற்காக இந்த நாணயங்களை பழனியில் இருந்து எடுத்து வந்ததும், அதற்கு அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரே நாளில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக அந்த வழியாக வந்த 20 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.