தூத்துக்குடியில் பட்டப்பகலில் கடையில் ரூ. 2¼ லட்சம் துணிகர கொள்ளை- சி.சி.டி.வி. காட்சி மூலம் வாலிபருக்கு வலைவீச்சு
- விக்னேஷ் தூத்துக்குடி-நெல்லை சாலையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.
- பொருட்கள் வாங்குவது போல வந்த வாலிபர் ஒருவர் பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது40). இவர் தூத்துக்குடி-நெல்லை சாலையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.
பணம் மாயம்
நேற்று வழக்கம் போல விக்கேஷ் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில இரவில் வியாபாரம் முடிந்து கணக்குகளை சரிபார்த்தனர்.
அப்போது ரூ. 2¼ லட்சம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடையின் ஊழியர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
துணிகர கொள்ளை
அப்போது கடையில் பொருட்கள் வாங்குவது போல வந்த வாலிபர் ஒருவர் ஊழியர்கள் கவனிக்காத நேரத்தில் கல்லாவில் இருந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.
இது தொடர்பாக விக்னேஷ் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஊழியர்கள் இருக்கும் போதே வாலிபர் கல்லாவை திறந்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.