சொகுசு காரில் ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல்- மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
- காரை சோதனை செய்தபோது, அதில் விலை உயர்ந்த செம்மரக்கட்டைகள் 10 துண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
- செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை:
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை வழியாக சொகுசு கார் ஒன்றில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து கார்களையும் சோதனையிட்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் ஒரு கார் திசையை மாற்றி வேகமாக சென்றது. உடனே போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். போலீசார் விரட்டி வருவதை கண்டதும் அந்த காரை ஓட்டி வந்த மர்ம நபர்கள் காரை மலையடிவாரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.
போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது, அதில் விலை உயர்ந்த செம்மரக்கட்டைகள் 10 துண்டுகள் இருந்தது தெரிய வந்தது. மர்மநபர்கள் அவற்றை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததும் தெரிந்தது.
கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் பள்ளிப்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காருடன் செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.