பஸ்சை அதிவேகமாக ஓட்டிய தனியார் பஸ் டிரைவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்- போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
- தம்பதியினர் வந்த மொபட் மீது அந்த தனியார் பஸ் மோதுவது போல் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது
- வண்ணார் பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகே மொபட்டை குறுக்கே விட்டு அந்த தம்பதி பஸ்சை சிறை பிடித்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் காவல்பிறை தெருவை சேர்ந்தவர் அருண்மணி. இவர் இன்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாளையில் இருந்து டவுனுக்கு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது வண்ணார் பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் பாளையங் கால்வாய் அருகே வந்த போது, புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் நோக்கி வந்த தனியார் பஸ் அதிவேகமாக வந்தது.
அப்போது தம்பதியினர் வந்த மொபட் மீது அந்த தனியார் பஸ் மோதுவது போல் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து இது போல் 2 முறை மோது வது போல் பஸ் இயக்கப் பட்டதால், அச்சமடைந்த அந்த தம்பதி வண்ணார் பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகே மொபட்டை குறுக்கே விட்டு பஸ்சை சிறை பிடித்தனர்.
பின்னர் அவர்கள் பஸ்சை அதிவேகமாக ஓட்டிய டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அதிவேகமாக வந்த தனியார் பஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அதிவேகமாக ஓட்டியது, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக அந்த தனியார் பஸ்சுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நெல்லையில் தனியார் பஸ்கள் போக்குவரத்து விதி களையும் ஒழுங்காக பின்பற்று வதில்லை. அதிக ஒலி எழுப்புவதோடு, அதிவேகத்திலும் தொடர்ந்து தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து சாலையில் செல்லும் மக்களை அச்சுறுத்தும் வகையில் தனியார் பஸ்கள் இயக்கப் படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் சமம் என்ற விதியை மீறி நெல்லையில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.