பூசாரிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லாத 5 தனியார் பஸ்கள் சிறைபிடிப்பு
- பூசாரிப்பட்டி வழியாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
- இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி வழியாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அவதி
இந்த நிலையில் சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் பஸ்கள் சில நிறுத்தங்களில் நிற்காமல் பாலம் வழியாக செல்கின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
உயர்மட்ட பாலம் அமைக்கும் முன்பு அனைத்து பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சென்றன. ஆனால் தற்போது சில நிறுத்தங்களை தவிர்த்து பாலம் வழியாக பஸ்கள் சென்று விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சிறைபிடிப்பு
இந்த நிலையில் நேற்று இரவு சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற 5 தனியார் பஸ்கள் வழக்கம் போல் பாலம் வழியாக இயக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பா.ம.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.கே.செல்வம் தலைமையில் பூசாரிப்பட்டி பகுதியில் அந்த 5 பஸ்களையும் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதனை மீறி சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் பஸ்கள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக தெரிவித்தனர். பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீ சார் அவர்களை சமாதா னப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.