சேலத்தில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட10 ஓட்டல்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை
- கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.
- இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
நாமக்கல் பரமத்திரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் அசைவ உணவு சாப்பிட்டு மயங்கிய 43 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதிரடி சோதனை
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைைமயில் அதிகாரிகள் 33 ஓட்டல்களில் நேற்று சோதனை நடத்தினர். இதில் சேலம் அஸ்தம்பட்டி, பேர்லேண்ட்ஸ், புதிய பஸ் நிலையம், சாரதா கல்லூரி ரோடு உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர் எடப்பாடி பகுதிகளிலும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த இந்த சோதனைகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 182 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக 1 0 கடைகளுக்கு விளக்கம் ேகட்டு நோட்டீஸ் அனுப்பி ய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடை உரிமையாளர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து இந்த கடைகளுக்கு போலீசார் மூலம் சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் கடை உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
2-வது நாளாக சோதனை
தொடர்ந்து 2-வது நாளாக இன்று சேலம் மாநகரில் ஜங்சன், கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளில் ஓமலூர், தம்மம்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அந்தந்த பகுதி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையின் போது அதிக அளவில் தரமற்ற இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சோதனை தொடரும் என்றும், ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.