வீட்டில் புகுந்து 3 லேப்டாப், விலை உயர்ந்த கைக்கடிகாரம் திருடிய வாலிபர் கைது
- மனோஜ்(20). இவர் 4 நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
- வீட்டுக்குள் வைத்திருந்த 3 லேப்டாப்புகள், 1 ஆப்பிள் கைக்கடிகாரம் உட்பட 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள வள்ளல் தெரு பகுதியை சேர்ந்த சரவணன் மகன் மனோஜ்(20). இவர் 4 நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
நண்பர்கள் வெளியில் செல்லும்போது வீட்டை பூட்டி வீட்டுக்கு அருகிலேயே ஒரு மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை அந்த பகுதியில் வைத்து விட்டு சென்றவர்கள் மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் வைத்திருந்த 3 லேப்டாப்புகள், 1 ஆப்பிள் கைக்கடிகாரம் உட்பட 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மனோஜ் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டம் கஸ்பா திருமலைபட்டி தெரு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (37) என்பவரை இன்று காலை கைது செய்தனர். அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பெரியசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.