காதல் திருமணம் செய்த வாலிபருக்கு ஒரு வருடம் ஜெயில்
- குமார் (வயது 34). ஈரோட்டில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
- போலி ஆவணங்களின் மூலம் எனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே, குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் குமார் (வயது 34). ஈரோட்டில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
காதல்
இவரும், ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். பிறகு அவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் சங்ககிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை தரப்பில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் குமார் மீது ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் போலி ஆவணங்களின் மூலம் எனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே, குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சாதி சான்றிதழ், பத்திரிகை உள்ளிட்ட போலியாக ஆவணங்கள் தயார் செய்து ஈரோட்டை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தது உறுதிசெய்யப்பட்டது.
ஓராண்டு ஜெயில்
இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சேலம் 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கமலகண்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலி ஆவணங்களின் மூலம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.