சேலம் உள்பட 5 மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள்
- தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கும் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.
- அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 5 மாவட்டத்தை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.
சேலம்:
தமிழ்நாடு கல்வித் துறை சார்பில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கும் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 5 மாவட்டத்தை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.
போட்டி தேர்வுகள்
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:-
மதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 20 நாட்களில் 70 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர். போட்டித் தேர்வுக்கு அரசு பள்ளி பாட புத்தகங்களை அதிக அளவில் நூலகத்தில் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனென்றால் போட்டித் தேர்வுகளுக்கு அரசு புத்தகத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிப்பவர்கள் என அனைவரும் நமது பிள்ளைகள். மாணவர்களின் கல்வி தான் முக்கியம். தனியார் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கைகள் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறைகள் தீர்க்கப்படும்.
வரலாறு படைக்கலாம்
அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. திருச்சி, கோவை மண்டலத்தை தொடர்ந்து சேலம் மண்டலத்தில் தற்போது ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்திட முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளோடு இணைந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் புதிய வரலாறு படைக்கலாம். கல்வி சேவையை தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் நலனிலும் அனைவரும் அக்கறை செலுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
எந்த துறையும் அரசு மட்டும் செயல்படுத்துவது கடினம். பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். அது போன்று தான் பள்ளி கல்வித்துறையிலும் தனியார் பங்களிப்பு முக்கியம். இதன் காரணமாகவே, இந்தியாவிலேயே 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
நகராட்சி துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.39 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். இந்த மாவட்டம் வீரபாண்டியாரால் வளர்க்கப்பட்ட மாவட்டம். சேலம் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், பெரியார் பல்கலைக்கழகம், கருப்பூர் என்ஜினீயரிங் காலேஜ் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டன.
கலைஞர் ஆட்சியிலும், தற்போதைய முதல்-அமைச்சர் ஆட்சியிலும் வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு இந்த விழாவே சாட்சி.
கடந்த காலங்களில் இதுபோன்ற ஆணை பெறுவதற்கு பலரை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வந்ததை மாற்றி யாரையும் சந்திக்க வேண்டியதில்லை என்ற நிலைக்கு முதல்-அமைச்சர் மாற்றி உள்ளார்.
ஒத்துழைப்பு
அது மட்டுமல்ல ஆசிரியர் கவுன்சிலிங் முறையில் எந்த ஒரு சிறு தவறும் நடந்திடாத வகையில் செயல்பட்டு ஆட்சியை விமர்சிக்கும் சமூக வலைத்தளத்தினரும் எதிரானவர்களும் பாராட்டும் வகையில் தமிழ்நாடு கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
இதே போன்று அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறோம். கல்வி துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், சேலம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், துணை மேயர் சாரதாதேவி, மண்டல தலைவர் உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.