மேட்டூர் தற்காலிக பஸ் நிலையத்தில்அடிப்படை வசதி இல்லாமல் பயணிகள் அவதி
- மேட்டூரில், ரூ.6.40 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது.
- பஸ் நிலையம் எதிரே மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
மேட்டூரில், ரூ.6.40 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது. தற்போதைய பஸ் நிலையம் உள்ள இடத்திலேயே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ள நிலையில் அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டு, கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.
தற்காலிக பஸ் நிலையம்
இந்நிலையில் பஸ் நிலையம் எதிரே மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையம் என்றாலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் செயல்பட உள்ளது. ஆனால் அவசரமாக அமைக்கப்பட்டதால் போதுமான இட வசதியின்றி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அந்த இடத்தில் 15 முதல் 20 பஸ்கள் வரை மட்டுமே நிறுத்த முடிகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.
பஸ்களுக்கான நிறுத்தங்கள் சரியாக ஒதுக்கப்படாததால் பஸ்கள் ஓட்டுநர்கள் சிரமம் அடைந்து வருகின்றன. அரசு நகரப் பஸ்கள் எங்கே உள்ளது என தெரியாமல் பயணிகள் அலைமோதுகின்றனர். அதேபோல, நிழற்குடை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே தற்காலிக பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.