சேலம் மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 5 சதவீதம் குறைந்தது
- சேலம் மாவட்டத்தில் 2 பருவ மழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.
சேலம்:
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையும், கடலோர மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்யும், ஆனால் சேலம் மாவட்டத்தில் 2 பருவ மழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.
தென்மேற்கு பருவ மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை உள்ள காலம், இந்த காலங்களில் தென் மேற்கு பருவ மழை அதிக அளவில் பெய்யும், இதையொட்டி சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏரிகள் மிகவும் வறண்ட நிலையில் இருந்ததால் ஏரி, குளங்களில் மிக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால் இன்னும் கூடுதலாக மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
5 சதவீதம் குறைவு
சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஜுன் 1-ந் தேதி முதல் நேற்றைய தேதியான செப்டம்பர் 8-ந் தேதி வரை 289.1 மி.மீ. மழை பெய்யும், ஆனால் இந்தாண்டு 274.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் வழக்கத்தை விட 15 மில்லி மீட்டர் குறைவாக பெய்துள்ளது. இது இயல்பை விட 5 சதவீதம் குறைவாகும், இன்னும் தென் மேற்கு பருவ மழை காலம் முடிய இன்னும் 21 நாட்கள் உள்ளது. இந்த நாட்களில் கூடுதல் மழை பெய்தால் வழக்கத்தை விட மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.