எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில்இடி, மின்னலுடன் பலத்த மழை
- நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை யெனினும் ஓரளவு மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது.
- இதனால் பல்வேறு இடங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை யெனினும் ஓரளவு மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது. குறிப்பாக சேலம், தம்மம்பட்டி, எடப்பாடி, மேட்டூர், ஏற்காடு, சங்ககிரி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இங்கு பல மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது.
விவசாய பணிகள்
இதனால் கிணறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மதகுகள், ஓடைகள், வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
பூ செடிகள், காபி செடிகள், அழகு செடிகள், தென்ைன மர கன்றுகள், நெற்பயிர்கள், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், புதினா, கொத்த மல்லி, சோளம், மரவள்ளிக்கிழங்கு, கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
எடப்பாடியில் பலத்த மழை
இந்த நிலையில் எடப்பாடி, அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தாலும் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் மழை வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டு தாழ்வான பகுதிகளில் பாய்ந்தோடியது.
பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கியது. குறிப்பாக எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் மேற்கொண்டிருந்தனர். நள்ளிரவில் பெய்த மிக கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளம், வாழை, பருத்தி, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாய்ந்தன.
பூலாம்பட்டி பில்லுக்குறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டு இருந்த வயல்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கி உள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளப் பயிர்கள் மழைக்கு தாக்குப்பிடிக்க இயலாமல் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைப் பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் வருவாய் துறையினர் மற்றும் வேளாண் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.