கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடக்க விழா
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
- சேலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
சேலம்:
தமிழகம் முழுவதும் ரேசன் கார்டுகள் மூலம் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது .
சிறப்பு முகாம்கள்
அதன்படி சேலம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக வருவாய் துறை மற்றும் கூட்டுறவு துறை மூலம் 1000-த்திற்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடத்தி தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். 15-ந் தேதி காலை இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளை வழங்குகிறார்.
எடப்பாடியில் தொடக்கம்
இதைதொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட தொடக்க விழா 15-ந் தேதி எடப்பாடியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்குகிறார். இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 வழங்கு வதற்கான ஆைணைகளை வழங்குகிறார்.
மேலும் ஏ.டி.எம்.மில் இந்த பணத்தை எடுக்க குடும்ப தலைவிகளுக்கு தனியாக ஒரு ஏ.டி.எம்.கார்டுகளும் வழங்கப்படுகிறது. எடப்பாடியி ல்நடைபெறும் விழாவில் 5 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை ஆணை மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்படுகிறது.
இதை தொடர்ந்து தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை அவரவர் கணக்கில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.