சேலத்தில் மாயமான 9-ம் வகுப்பு மாணவிகள் முசிறியில் மீட்பு
- சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
- அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இந்த 2 மாணவிகளும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். பின்னர் மதியம் பள்ளியிலிருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அதில் ஒரு மாணவி தனது தாய் மாமனுக்கு போன் செய்து நாங்கள் இருவரும் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாத காரணத்தால் வெளியூர் செல்கிறோம், எங்களை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னலை கண்காணித்தபோது மாணவிகள் திருச்சி பஸ்சில் சென்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசார் உடனடியாக பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் செல்போன் எண்களை வாங்கி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் அந்த மாணவிகளை முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்துக் கொண்டனர். அதன்படி முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மாணவிகளை பள்ளப்பட்டி போலீசார் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று இரவு மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்தனர்.