உள்ளூர் செய்திகள்

மேட்டூரில் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறிய காட்சி.

மேட்டூரில் ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

Published On 2023-11-17 09:47 GMT   |   Update On 2023-11-17 09:47 GMT
  • காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
  • குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது.

மேட்டூர்:

மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அனல்மின் நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாகியது.

இதனை அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் பம்ப் செய்வதை உடனடியாக நிறுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் வெளியேறியதால் சாலை முழுவதும் வெள்ளமாக காட்சியளித்தது.

அவ்வழியே சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றது. குடிநீர் குழாயில் உடைப்பு காரணமாக பல ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியாகம் பாதிக்கப்பட்டது .

உடைப்பு ஏற்பட்ட பகுதியை மாலை 4 மணி அளவில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சரி செய்தனர். அதன் பின்னர் நீர் திறந்து விடப்பட்டது.

குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான நிலையில் உள்ள ராட்சத குழாய்களை மாற்றினால் மட்டுமே பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும் என அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News