ஆத்தூர் அருகே மழையால் பாறை சரிந்தது
- சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது.
- தொடர் கனமழை காரணமாக சடையம்பட்டி, சித்தம்பட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சாலையில் நடுவே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் வனப்பகுதியில் இருந்து கீழ்நாடு ஊராட்சிக்குட்பட்ட சடையம்பட்டி கல்லூர், சேம்பூர், நாகலூர், கணியான் வளைவு , அடியலூர் குன்னூர், சித்தம்பட்டி, சடையம்பட்டி உள்ளிட்ட 25 மலை கிராமங்களுக்கு செல்லும் பாதையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது.
இந்த தொடர் கனமழை காரணமாக சடையம்பட்டி, சித்தம்பட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சாலையில் நடுவே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் 25 கிராம மலை வாழ் மக்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு எந்தவித பொருட்களும் வாங்க நகரப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று 4-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மண் சரிவு ஏற்பட்டு தகவலறிந்த வனத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மலை கிராம மக்களே ஒன்றிணைந்து சாலையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்து வரும்நிலையில் இதுபோன்ற மண்சரிவு அடிக்கடி மலை கிராம பகுதியில் நடைபெற்று வருவதாகவும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.