உள்ளூர் செய்திகள்

சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டை அகற்ற வலியுறுத்தி வணிக வளாக வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

சேலம் ஈரடுக்கு பஸ் நிலையம் அருகே செயல்படும்பூ மார்க்கெட்டை அகற்ற வலியுறுத்திவணிக வளாக கடை வியாபாரிகள் போராட்டம்

Published On 2023-10-12 08:36 GMT   |   Update On 2023-10-12 08:36 GMT
  • ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்ததையொட்டி வ.உ.சி பூ மார்கெட் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மாநகராட்சி வணிக வளாகம் முன்பு கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
  • இதனால் வணிக வளாகத்தில் கடை எடுத்து தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையம் போஸ் மைதானத்தில் தற்காலிக வ.உ.சி. பூ மார்க்கெட் இயங்கி வந்தது. இதற்காக தற்காலிக ஷெட் போடப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.

தற்காலிக கடைகள்

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்ததையொட்டி வ.உ.சி பூ மார்கெட் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மாநகராட்சி வணிக வளாகம் முன்பு கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கு பூ மார்க்கெட் வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேறு வழி இல்லாமல் அங்கேயே கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வணிக வளாகத்தில் கடை எடுத்து தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியாபாரம் பாதிப்பு

காலை மற்றும் மாலை நேரங்களில் வளாகத்திற்குள் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பூக்கடைகளும் இருப்பதால் வாடிக்கையாளர் தங்கள் கடைக்கு வருவது பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் கடை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உடனடியாக பூக்கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தர்ணா போராட்டம்

ஆனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் வணிக வளாக வியாபாரிகள் கடையை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து வணிக வளாக வியாபாரிகள் இன்று வணிக வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சேலம் மாநகராட்சி வணிக வளாகப் பகுதியில் பூக்கடைகள் வைக்க அனுமதி அளித்ததால் தங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

வாடிக்கையாளர் குறைவு

இது குறித்து சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. மாநகராட்சி வணிக வளாகமும், பூ மார்க்கெட்டும் ஒரு இடத்தில் செயல்படுவதால் வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வணிக வளாகத்தில் உள்ள பூக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் வணிக வளாகத்தை காலி செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பூ மார்க்கெடடை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுவரையில் பொறுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சில் உடன்படாத வியாபாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News