சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி
- நாகராஜ் அவரது உறவினர்கள்மற்றும் உதவியாளர் ஒருவர் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டிற்காக 1200 பேரிடம் ரூ.3 கோடி வரை வசூலித்துள்ளார்.
- கடந்த மாதம் 10-ந் தேதி தீபாவளி சீட்டு பணத்தை பரிசுடன் வழங்குவதாக கூறிய நாகராஜ் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார்.
சேலம்:
சேலம் மெய்யனூரை சேர்ந்தவர் நாகராஜ் (32), இவர் சர்க்கார் கொல்லப்பட்டி முனியப்பன் கோவில் அருகில் கம்மங்கூழ் கடை நடத்தி வந்தார்.
தீபாவளி சீட்டு
அப்போது அந்த பகுதி மக்கள் பழக்கமானதால் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அதை நம்பி அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அவரிடம் சீட்டு சேர்ந்து தீபாவளி பண்டிகையின் போது பணத்துடன் பரிசுகளையும் பெற்று வந்தனர்.
நடப்பாண்டில் நாகராஜ் அவரது உறவினர்கள்மற்றும் உதவியாளர் ஒருவர் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டிற்காக 1200 பேரிடம் ரூ.3 கோடி வரை வசூலித்துள்ளார். கடந்த மாதம் 10-ந் தேதி தீபாவளி சீட்டு பணத்தை பரிசுடன் வழங்குவதாக கூறிய நாகராஜ் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 20-ந் தேதி புகார் கொடுத்தனர்.
தொடர்ந்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் பாதிக்கப் பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆவணங்கள் பெறப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
வழக்கு பதிவு செய்து தலைமறைவான நாகராஜை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் கார்மேகம், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளிடமும் புகார் அளித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.