9,10-ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்ட ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை
- தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் அமைக்க ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
- பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிக்கு ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம்:
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் அமைக்க ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிக்கு ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9, 10 -ம் வகுப்புகளுக்கு...
தற்போது, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராக செயல்பட, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்வு செய்து அறிக்கை அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 9-ம் வகுப்பு மொழிப்பாட ஆசிரியர் அல்லது கணினி ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி, ஆய்வு நிறுவன பேராசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளில் படிக்கும்போதே, மாணவர்களிடம் உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
288 ஆசிரியர்கள்
சேலம் மாவட்டத்தில் 9, 10-ம் வகுப்பு இடம்பெற்ற 288 அரசு பள்ளிகள் உள்ளன. எனவே பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் 288 வழிகாட்டி ஆசிரியர்கள் மாவட்டத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.