சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கொழு கொழு குழந்தைகள் போட்டி
- ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை விழாவை காண ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
- ஏற்காட்டில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் 46-வது கோடை விழா கடந்த 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை விழாவை காண ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
இவ்வாறு ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டி நடத்தப்படுகிறது.
நேற்று மகளிர் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இணைந்து ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தின. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட திட்ட அலுவலர் பரிமளா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தனர்
இதில் கொழு கொழு குழந்தை, நடனம், வடிவங்களை கண்டுபிடித்தல், திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. ஏற்காட்டில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.
கொழு கொழு குழந்தை போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களுக்கான பரிசுகள் கோடை விழா இறுதி நாளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகள் அழகைக் காண அதிகளவில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் வந்திருந்தனர். மழலையரின் கொஞ்சும் பேச்சும் நடனமும் பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க செய்தது.
இதேபோல் இன்று மாரத்தான், கால்பந்து, பெண்களுக்கான கயிறு இழுத்தல் மற்றும் சாக்கு போட்டி, இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, பல்சுவை நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.