இலவச வீட்டு மனைக்கு வழங்கிய நிலத்தை மீட்டு தர கோரி பெண்கள் தர்ணா போராட்டம்
- சேலம் மாசி நாயக்கன்பட்டி காந்தி நகர் காலனியை சேர்ந்த கந்தையன் மற்றும் 50- க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை தலையில் வைத்து சுமந்தபடி வந்தனர்.
- திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மாசி நாயக்கன்பட்டி காந்தி நகர் காலனியை சேர்ந்த கந்தையன் மற்றும் 50- க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை தலையில் வைத்து சுமந்தபடி வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு 1982-ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் 24 சென்ட் நிலம் வழங்கப் பட்டது. இதனை அந்த பகுதியில் பள்ளி நடத்தி வரும் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்.
இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இது தொடர்பான வழக்கிலும் எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது. 30 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி யும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அந்த நிலம் எங்களுக்கு கிடைக்கவில்லை
இதனால் வீட்டுமனை இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே உடனடியாக இந்த நிலத்தை மீட்டு எங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.