புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சங்ககிரி, காருவள்ளி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
ஓமலூர்
ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இன்று முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நீண்ட வரிசை
இதையொட்டி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் புரட்டாசி கடைசி வாரம், ஐப்பசி மாத முதல் வாரத்தில் தேரோட்டம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சங்ககிரி
சங்ககிரி அருகே ஒருக்காமலையில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் சங்கரன் தலைமையில் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து திருக்கோடி ஏற்றப்பட்டது. சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமியை வழிபட்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா உத்திரவின் பேரில் சங்ககிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.